Saturday, September 3, 2011

புதுச்சேரி: நிலத்தடி நீர் Vs. தனியார் பள்ளிகளில் கட்டணம்

தாறுமாறாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்

செப்டம்பர் 03,2011,00:00  IST

புதுச்சேரி : "நிலத்தடி நீரை தொழிற்சாலைகள் தாறுமாறாக உறிஞ்சுவதை அரசு கண்காணிப்பது கிடையாது' என, அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.

"நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறுவது' குறித்து சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானத்தை அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று கொண்டு வந்தார்.

வேளாண் அமைச்சர் சந்திரகாசு: புதுச்சேரியில் எதிர்கால நீர் வளத்தை நிர்வகிக்க, உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தபட்டு வரும் நீரியல் திட்டம் 2ன் கீழ், ரூ.13 கோடி செலவில் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. லாஸ்பேட்டையில் ரூ.2.50 கோடியில் நீராதார தகவல் மையம் மற்றும் நீர் பரிசோதனை மையம் ஏற்படுத்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் வளம், தரத்தைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்தும் வகையில், 35 சோதனை குழாய் கிணறுகள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் வடமேற்குப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் வளத்தையும், அதன் தன்மையையும் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நிலத்தடி நீர் வளம் பெருக வாய்ப்புண்டு. நிலத்தடி நீரில் ஊடுருவிய கடல் நீர் மேலும் பரவாமல் சாத்தியக்கூறு ஏற்படும். 

அன்பழகன்: நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால், கடல் நீர் உட்புகுந்து கடற்கரையிலிருந்து 8.கி.மீ., தூரத்திற்கு நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நிலத்தடி நீரை தாறுமாறாக உறிஞ்சுவதை, நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்கவில்லை. இந்நிலை நீடித்தால், எதிர்காலத்தில் குடிநீருக்கு வேறு மாநிலத்தை நம்பியிருக்கும் சூழ்நிலை ஏற்படும். நூறு ஆண்டுகளுக்கு முன் நீர் ஓடிய ஆற்றுப் பகுதிகளைக் கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம்.தமிழகத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளனர். மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும். அதுபோல, புதுச்சேரியிலும் மழை நீர் சேகரிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.

அமைச்சர் சந்திரகாசு: நடவடிக்கை எடுக்கப்படும்

Courtesy_

Also read the related stories

தனியார் பள்ளிகளில் கட்டணம்: சட்டசபையில் காரசார விவாதம்

செப்டம்பர் 03,2011,00:00  IST

புதுச்சேரி : தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்

அன்பழகன்: புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன...

அமைச்சர் கல்யாணசுந்தரம்: தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிக்கேற்ப கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டசபையில் மசோதா கொண்டுவர மத்திய அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது பரிசீலனையில் உள்ளது.

அன்பழகன்: இந்தக் கேள்வியை 10 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். குழு அமைக்கப்படும் என்ற பதிலே தொடர்ந்து அளிக்கப்படுகிறது. குழு அமைப்பதைத் தடுப்பது யார்... தமிழகம், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. புதுச்சேரியில் ஏன் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது... கட்டணத்தை அடிக்கடி உயர்த்துவதால் பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

முதல்வர் ரங்கசாமி: பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் ஏன் சேர்க்கக் கூடாது... நல்ல கட்டடத்தில் அரசு பள்ளிகள் இயங்குகின்றன. நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். தனியார் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமா... ஒரே பள்ளியில் சேர வேண்டும் என அனைவரும் செல்வதால் அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். கல்வி கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்தை அரசு பரிசீலிக்கும். 

லட்சுமிநாராயணன்: அரசு பள்ளிகளின் தரம் என்ன, என்னன்ன பிரச்னைகள் உள்ளது என பாருங்கள். பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது.

முதல்வர் ரங்கசாமி: அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர். முதலிடம் பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் அப்பா டாக்டரா, அம்மா தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறாரா என பார்த்து சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

லட்சுமிநாராயணன்: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் முதல்வர் பேசுவதற்கு அவசியம் இல்லை.

அன்பழகன்: கட்டணம் நிர்ணயம் தொடர்பாக சட்டம் கொண்டு வாருங்கள்.

முதல்வர் ரங்கசாமி: இதுதொடர்பாக குழு அமைக்கப்படும்.

Courtesy_


--
Visit me at: 

No comments:

Sharing

முதன்மை நாட்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...